26 Aug 2026

பிரியமான எதிரிகளும் கனிவான கடுஞ்சொற்களும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 17

பிரியமான எதிரிகளும் கனிவான கடுஞ்சொற்களும்!

திருவாரூர் விஜயபுரம்.

வி.ஆர்.எம் சாலை.

வாசன் கபே.

வடமேற்கு மூலை மேஜையில் அவனும் அவளும்.

மாலை மணி ஐந்தரை இருக்கும்.

கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே மழைத் துளிகள் கோடு கோடாய் இறங்கிக் கொண்டிருந்தன.

இரண்டு காபி டம்ப்ளர்.

நடுவே லேசாக எழுந்த ஆவி.

அவள் தன் கையால் காபி டம்ப்ளரை இப்படியும் அப்படியுமாகச் சுழற்றிக் கொண்டிருந்தாள்.

"எனக்கு திருச்சி ஆபீஸ்க்கு டிரான்ஸ்பர் கன்பர்ம் ஆயிடுச்சு. அடுத்த வாரம் கிளம்பறேன்."

சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள். குரலில் எந்தவிதமான அழுத்தமும் இல்லை. செய்தி வாசிப்பாளர் போல ஒரு நிதானம்.

அவன் காபி டம்ப்ளரை உதட்டுக்குக் கொண்டு போனான். கை லேசாக அதிர்ந்தது. அதை மறைக்க, டம்ப்ளரை மேஜை மீது சற்று அழுத்தமாக வைத்தான்.

டங்க் என்ற சத்தம்.

"கிரேட். ஆல் தி பெஸ்ட்," என்றான். குரலில் லேசான நக்கல். உதட்டின் ஓரத்தில் ஒரு செயற்கையான கேலிச் சிரிப்பு.

"தேங்க்ஸ்."

"அங்க போய் ரொம்ப பிஸியாகிடுவ. அப்புறம் வாரத்துல நாலு நாள் திருச்சி, திருவண்ணாமலைன்னு அலைஞ்சிட்டு இருப்ப. அப்புறம் நம்மளையெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கப் போகுது? அவனா ஆமா, திருவாரூர்ல ஒருத்தன் இருந்தானேன்னு யோசிப்ப, அவ்வளவுதானே?"

சொற்களை ஒவ்வொன்றாக வெட்டிப் பேசினான். அவனுடைய கண்கள் அவளைப் பார்க்கவில்லை. ஜன்னலுக்கு வெளியே பளபளத்த தார்ச்சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனங்களை வெறித்துக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் ஓர் அந்நியத்தன்மை. ஒரு பொய்யான கோபம்.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். "நீ என்மேல கோபமா இருக்கியா?"

"எனக்கென்ன கோபம்? சந்தோஷம்தான்!" என்றான் தோள்களை உயர்த்தியபடி.

அவனே தொடர்ந்தான், "நாம ரெண்டு பேரும் தொழில்முறை நண்பர்கள். அவ்வளவுதானே? நீ உன்னோட பதவி உயர்வைப் பார்க்குறே. நான் என்னோடதப் பார்க்குறேன். இதுல கோபப்பட என்ன இருக்கு? நீ ஒன்னும் எனக்குக் கடமைப்பட்டவள் இல்லையே."

"நீ எனக்கு யாருமே இல்லைங்றது ஓர் உலக மகா நடிப்பு. ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றே இல்ல." மனதுக்குள் நினைத்தபடி அவள் மெல்லச் சிரித்தாள்.

அவனுக்கு அது எரிச்சலூட்டியது. "ஏன் சிரிக்கிற?"

"இல்லை, 2000 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் உன்னைப் பத்தி அவ்வளவு கச்சிதமா பக்காவா எழுதிட்டுப் போயிருக்காரு."

"என்னைப் பத்தியா? ரெண்டாயிரம் வருஷதுக்கு முன்னாடி எப்படி என்னைப் பத்தி? யாரு அது?"

"வேற யாரு? திருவள்ளுவர்தான்!"

"திருவள்ளுவரா? திடீர்னு தமிழ்ப் பாடம் எடுக்கப் போறியா?"

"ம்! அவர் ஒரு குறள் எழுதியிருக்கார்,

"செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு."         (குறள், 1097)

இதோட அர்த்தம் என்ன தெரியுமா?" அவள் தன் கையை மேஜை மீது நீட்டி, அவன் கைக்கு அருகில் கொண்டு சென்றாள்.

அவன் பதில் எதுவும் சொல்லாமல் புருவத்தை உயர்த்தினான்.

"உண்மையிலேயே நம்ம மேல அதிக அன்பும் பிரியமும் இருக்கறவங்கதான், அதை வெளியே காட்டிக்கிட்டா அழுதுடுவோம்னு பயந்து, லேசான கடுஞ்சொற்களைப் பேசுவாங்களாம். எதிரி மாதிரி ஒரு பொய்யான, கொடூரமான பார்வையைப் பார்ப்பாங்களாம். ஏதோ சம்பந்தமே இல்லாத அந்நியன் போல நீ யாருன்னே தெரியாதுங்கிற மாதிரி பாவனை பண்ணுவாங்களாம். ஆனா, அந்தப் பொய்யான கோபத்துக்கும், அந்த அந்நியப் பார்வைக்கும் பின்னாடி இருக்கிறது, ஒரே ஒரு விஷயம்தான். உன்னை விட்டு பிரிய முடியலையேங்கிற பயமும் பிரியமும் மட்டும்தான்."

அவன் அசைவற்று உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்தப் பொய் ஆக்ரோஷம், கேலிச் சிரிப்பு, அந்நியப் பார்வை எல்லாம் ஒரு நொடியில் பஞ்சரான வண்டிச் சக்கரம் போல ஆயின.

அவன் தன் கையைத் திருப்பி அவளுடைய விரல்களை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான். அவனுடைய விரல் நுனிகளில் மெல்லிய நடுக்கம் இருந்தது.

"நீ திருச்சி போனப்புறம், வீக்கெண்ட்ல நான் பைக் எடுத்துட்டு வந்தா காபி வாங்கித் தருவியா?" என்றான். அவனுடைய குரல் இப்போது மிகவும் தாழ்ந்து, மிருதுவாகியிருந்தது.

அவள் சிரித்தாள். "காபி மட்டும் இல்லை, திருவள்ளுவர் குறளுக்கு விளக்கமும் தருவேன்."

"அதையெல்லாம் நான் விகடபாரதின்னு ஒருத்தன் ப்ளாக்ஸ்பாட்டுல எழுதுறான். அதுலேயே நான் படிச்சுக்கிறேன். எனக்கு நீயும் காபியும் மட்டும் போதும்." அவன் சிறுபிள்ளையைப் போலக் குழறினான்.

கபே ஜன்னலில் மழைத் துளிகள் மெல்ல வழிந்தன. அவர்களுக்கு இடையே உருவாகியிருந்த சிறிய இடைவெளியில், இப்போது இருவருக்குமான தூரம் சுத்தமாகக் குறைந்திருந்தது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

25 Aug 2026

கத்திக் கொள்வது காதலின் டெசிபல் விளையாட்டு!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 16

கத்திக் கொள்வது காதலின் விளையாட்டு!

விளமல்.

தேசிய நெடுஞ்சாலை 83.

சுட்டெரிக்கும் மதிய உச்சி வெயில்.

தார்க்காற்றின் வெப்ப அலைகள் சாலையில் பிம்பங்களை நெளித்துக் காட்டிக் கொண்டிருந்தன.

சிக்னலின் சிவப்பு விளக்கு எரிய, அவன் தன் பைக்கின் எஞ்சினை அணைத்து விட்டு, கால்களைக் கீழே ஊன்றி நிறுத்தினான்.

அவனது ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் அமர்ந்திருந்த அவளது முகம் தெரிந்தது. டிராபிக் ஜாம் கோபத்திலும், வெயிலின் காங்கைத் தாக்குதலிலும் அவளது முகம் அப்படியே கோவைப்பழம் போலச் சிவந்து போயிருந்தது.

சிக்னல் பச்சையைக் காட்டியதும் வண்டியை முறுக்கியபடி திருவாரூர் பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை வழியாகச் சோமசுந்தரம் பூங்காவிற்கு முன் வண்டியை நிறுத்தினான்.

"ஏன்டா உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? இந்த உச்சி வெயில்ல விளமல்ல இருந்து என்னை சோமசுந்தரம் பார்க்கு ஏன்டா கொண்டு வந்திருக்கே? இந்த பனகல் ரோட் டிராபிக்ல வேர்த்து கொட்டுது. எனக்கு ஆபீஸ்ல ஆயிரத்தெட்டு வேலை இருக்கு தெரியுமா?"

அவளது குரலில் டெசிபல் ஏறியிருந்தது. சோமசுந்தரம் பூங்காவின் வாயிலில் சுற்றியிருந்த ஆட்டோக்காரர்களும், பூங்காவின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த பொதுமக்களும் லேசாகத் திரும்பிப் பார்த்தார்கள்.

அவன் சலனமில்லாமல் தன் ஹெல்மெட் விசரை மெல்ல உயர்த்தினான். நெற்றியில் அரும்பியிருந்த வேர்வையைத் துடைத்துக்கொண்டே, அவளது கோபமான முகத்தை நேராகப் பார்த்தான்.

"நானும் ஒன்னும் ஜாலியா வரலடி! நீ நேத்து ராத்திரி கெஞ்சி கேட்ட அந்த ஆடிட் ரிப்போர்ட் அனாலிசிஸை, நைட் பூரா தூங்காம முழிச்சு உக்காந்து ரெடி பண்ணியிருக்கேன். இப்போ கரெக்ட் டைம்க்கு சோமசுந்தரம் பார்க்ல வெச்சு அதை உன்கிட்ட தரலைன்னா, ஆபீஸ்ல உன் மேனேஜர் உன்னை எல்லாரும் முன்னாடியும் வச்சு திட்டுவான்னுதான் இந்தச் சுட்டெரிக்குற வெயில்ல ஓடி வந்தேன். அதுக்கு போய் இப்படிக் கத்துறியே!"

"ஓ! பெரிய தியாகி! அதுக்கு நான் தலைகுனிஞ்சு நன்றி சொல்லணுமோ? அதை ஆபீஸ் மெயில்லயே அனுப்ப வேண்டியதானே? இல்ல அதை அங்கேயே ஆபிஸ்லேயே வெச்சு தர வேண்டியதுதானே. அதுக்கு எதுக்கு விளமல்ல இருக்குற ஆபிஸ்லேர்ந்து இவ்வளோ தூரம் வரணும்? என்னை இந்த வெயில்ல அலைய வைக்கணும்னு உனக்கு ஒரு சந்தோஷம், அவ்வளவுதானே?" அவளது கண்கள் கோபத்தில் பொரிந்தன.

"மெயில்ல அனுப்பினா பைல் சைஸ் அதிகம்டி! சர்வர்ல பிளாக் ஆகும்னு தெரியாதா? அதான் பென்டிரைவ்ல கொண்டு வந்தேன். அதெ ஆபிஸ்ல வெச்செல்லாம் கொடுக்க முடியாது. வேணும்னா அமைதியா வாங்கிட்டு போ, இல்லைனா இப்படியே பைக்ல இருந்து இறங்கி ஆட்டோ பிடிச்சு ஆபீஸுக்குப் போ!" அவன் குரலை உயர்த்தினான்.

அவனது முகத்திலும் கடுமையான எரிச்சல் படர்ந்திருந்தது. யாராவது பார்த்தால், இருவரும் ஏதோ பெரிய சண்டை போட்டுக்கொண்டு, இனி வாழ்நாளில் பேசவே மாட்டார்கள் என்றுதான் நினைப்பார்கள்.

அவள் அவனை உக்கிரமாய் முறைத்தாள். "சரி சரி மெண்டல் மாதிரி கத்தாதே! முதல்ல அந்த பென்டிரைவை எடு!"

அவன் தன் சட்டைப் பையில் கைவிட்டு, சிறிய சில்வர் வண்ண பென் டிரைவை எடுத்தான். அதை அவளது கையில் சற்று அழுத்தமாகத் திணிக்கும் அதே வேளையில், சட்டென்று பைக் கவரில் வைத்திருந்த பார்சலையும் அவள் கைகளில் கொடுத்தான்.

"இது என்ன?" அவள் புரியாமல் புருவங்களை உயர்த்தினாள்.

"நீ காலைல ஆபீஸுக்கு சீக்கிரம் போகணும்னு சாப்பிடாம ஓடி வந்திருப்பன்னு எனக்கு நல்லாத் தெரியும். இந்தச் சுட்டெரிக்குற வெயில்ல பசிச்சா வயிறு எரியும். அப்புறம் நாள் முழுக்க உன்னால வேலை செய்ய முடியாது. அதான் வர்றப்பவே பகவதி மெஸ்ல ஒரு மட்டன் பிரியாணி பார்சல் பண்ணிகிட்டு வந்தேன். இப்போது ஒழுங்கா பார்க்குல உக்காந்து சாப்பிடு," என்றான் குரலை மென்மையாக்கி.

அவள் கையிலிருந்த அந்த மட்டன் பிரியாணி பார்சலைப் பார்த்தாள். நொடியில் அவளது கோபம் பனியாக உருகியது. அவளது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

"ஏன்டா அவ்ளோ கோபமாப் பேசுற மாதிரி நடிச்ச? நிஜமாவே எனக்கு கோபம் வந்துடுச்சு தெரியுமா?" அவள் லேசான வெட்கத்துடன் கேட்டாள்.

அவன் சிரித்தான். "நீதானே வெயில்ல சும்மா சும்மா கத்தின. சரி, பொண்ணு முன்னாடி நாமளும் கொஞ்சம் கெத்து மெயின்டெய்ன் பண்ணுவோமேனுதான்! சீக்கிரம் சாப்பிடு. ஆபீஸ்ல கொண்டாந்து விடுறேன்."

"நான் மட்டும் எப்பிடிடா? நீயும் வா!"

"புல் ப்ளேட் பிரியாணியைப் புல் கட்டு கட்டினாத்தான் உனக்கெல்லாம் கட்டுபடியாகும். இது ஆப் ப்ளேட்தான். சீன் போடாம டக்குன்னு சாப்பிடு."

"டேய் அடிச்சேன்னா பாரு. உன்னை இங்கேயோ கொன்னு போட்டு பிரியாணியாக்கித் தின்னுடுவேன்!"

"ஆத்தா மவராசி! நீ செஞ்சாலும் செய்வே. ஷேர் பண்ணி பிரியாணியைத் தின்னுட்டு நான் பிரியாணி ஆகாம தப்பிச்சுக்கிறேன்." என்று அவன் ஆட்டுக்குட்டியைப் போல அவள் பின்னால் போனான்.

அவள் சிரித்தபடியே ஓரமாக மரநிழல் உள்ள அமைதியான பெஞ்சை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.

கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள்.

கோபம் உள்ள இடத்தில்தான் காதல் இருக்கும் என்கிறார் வள்ளுவர். அதை நீங்களே பாருங்களேன்.

"உறாஅ தவர்போல் சொல்லினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்."                 (குறள், 1096)

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

24 Aug 2026

ஓரக்கண்ணிற்கான ஆப்டிகல் விதிகள்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 15

ஓரக்கண்ணிற்கான ஆப்டிகல் விதிகள்!

மழைத் தூறல் லேசாக ஹெல்மெட் விஸரில் விழ, கையால் அதைத் துடைத்தபடி கேடிஎம் 390 டியூக் பைக் எஞ்சினின் கர்ஜனையைக் கூட்டினான் அவன்.

திருவாரூர் வாளவாய்க்கால் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தது.

வண்டி நின்றது.

பக்கத்தில் வந்து நின்றது ஒரு சிவப்பு நிற வெஸ்பா ஸ்கூட்டர்.

ஓட்டுவது அவள்.

அவனுக்கும் அவளுக்கும் இடையே கடந்த மூன்று வாரங்களாக ஒரு மெளனப் போர் ஓடிக்கொண்டிருந்தது.

திருவாரூர், தெற்கு வீதியில் இருக்கும் ஐலவ்ஐலவ்ஐ தனியார் வங்கிக் கிளையில் இருவரும் ஒரே டிபார்ட்மென்ட்.

அடுத்த வாரம் அறிவிக்கப்படப்போகும் அசிஸ்டெண்ட் மேனேஜர் பதவி உயர்வுக்கான போட்டியில் இருவருமே இருந்தார்கள். காதலும் இருந்தது, கூடவே யார் கெத்து என்ற தடிப்பான ஈகோ எனும் தன்முனைப்புக்கான சுவரும் நடுவே நின்றுகொண்டிருந்தது.

விளைவு…

வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு பதில் அனுப்புவதில் தாமதம், வங்கியின் உணவு அறையில் சந்தித்தால் லேசான தலையசைப்பு மட்டுமே என இருவருமே தங்களை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ளப் போராடினார்கள்.

அவனுக்கு அவளை நேருக்கு நேர் பார்க்க வேண்டும், மனம் விட்டுப் வேண்டும் என்று அத்தனை தவிப்பு. ஆனால், ''நான் ஏன் முதலில் பார்க்க வேண்டும்? பார்த்தால், நாம் இறங்கி வந்ததா ஆயிடுமே!'' என்ற அக்மார்க் ஆண் திமிர் அவனைத் தடுத்தது.

சிக்னலுக்காகக் காத்து நின்றவன், தலையைச் சற்று உயர்த்திக் கொண்டு நேராகப் புலிவலத்துக்குச் செல்லும் சாலையைப் பார்த்தான்.

அதே நேரத்தில் ஹேண்டில்பாரை இறுக்கமாகப் பிடித்தபடி, அவனது பார்வை லேசாக இடது ஓரம் சரிந்தது. அவளை நேரடியாகப் பார்க்காதது போலவும், சிக்னலின் மீது மட்டுமே முழு கவனமும் இருப்பது போலவும் ஒரு பக்கா சிவாஜி கணேசனும் கமலஹாசனும் கலந்தது போன்ற ஒரு நடிப்பு.

அவள் அதைக் கவனித்துவிட்டாள். ஹெல்மெட் விசரைக் லேசாக உயர்த்தி விட்டாள்.

அவளும் அவனை நேருக்கு நேராகப் பார்க்கவில்லை. வண்டியின் கண்ணாடியைச் சரிசெய்வது போலப் பாசாங்கு செய்தாள்.

அவளுடைய நேர்க்கோடு பார்வை சாலையை நோக்கியிருந்தது.

ஆனால், அந்தச் சாய்ந்த ஓரக்கண் பார்வை அவனின் பதற்றத்தை, அவன் ஓரக்கண்ணால் தன்னைத் திருட்டுத்தனமாக நோட்டமிடுவதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்தது.

அவள் உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்ப, கடைக்கண்ணால் ஒரு கேலிப் பார்வை பார்த்தாள்.

''டேய் லூசு! காஸ்ட்லி பைக்ல கெத்தா உக்காந்திருந்தாலும், என்னை நேராப் பார்க்க தைரியம் இல்லாம, சிக்னலைப் பாக்குற மாதிரி ஓரக்கண்ணால திருட்டுத்தனமா பாக்குறீயேடா!'' என்ற எள்ளலும், ''உன் ஈகோ எனக்குத் தெரியாதா?'' என்ற கேலியும் கலந்த சிரிப்புடன் கூடிய ஓரக்கண் பார்வை அது.

அந்த ஒரு நொடிச் சிரிப்பில், அந்தக் கேலிப் பார்வையில் அவன் கட்டி வைத்திருந்த மொத்த தன்முனைப்புக் கோட்டையும் தவிடுபொடியானது.

தன் திருட்டுத்தனம் மாட்டிக்கொண்டதை நினைத்து ஹெல்மெட்டுக்குள் அவன் முகம் சிவந்தது.

அவள் இப்போது சத்தமாகவே சிரித்துவிட்டாள்.

தான் தோற்றுவிட்டோம் என்பதை அவனுடைய உள்மனம் உணர்ந்துகொண்டது.

பச்சை விளக்கு எரிந்தது.

அவள் வெஸ்பா ஸ்கூட்டரை முறுக்கிக் கொண்டு சீறிப் பாய்ந்தாள்.

அவன் பைக்கை நகர்த்தக் கூட மறந்து, அப்படியே நின்றான்.

பின்னால் வண்டிகளின் ஹாரன் சத்தம் காதைப் பிளந்தது. தாங்க முடியாத அந்தச் சத்தத்திற்கு மத்தியில் அவளது ஸ்கூட்டர் புகையைக் கிளப்பிக் கொண்டு சென்று மறைவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பெண்களின் அந்த ஒரு கடைக்கண் பார்வையோடு கூடிய கேலி சிரிப்புக்கு முன்னால் எந்த ஆண்களின் தன்முனைப்பும் நிற்காது.

ஏனென்றால், அந்த ஓரக்கண் நக்கல் பார்வைக்கான ஆப்டிக்கல் விதியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பொட்டில் அடித்தது போல எழுதி விட்டார்.

''குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்.''                 (குறள், 1095)

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

23 Aug 2026

பார்வைக் கோளாறின் வரலாறு!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 14

பார்வைக் கோளாறின் வரலாறு!

திருவாரூர் தொடர்வண்டி நிலையம்.

மாலை நேரத்துக்கே உரிய பயங்கர கூட்டம்.

அவன் தன் ஐபோன் திரையை வெறித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவன் கவனம் முழுவதும் முதல் நடைமேடையில் நின்றிருந்த அந்த ஊதார நிற சுடிதார் மேல்தான். பெயர் தெரியாது. ஆனால் தினமும் மாலை 5:15 காரைக்கால் – திருச்சி பயணியர் தொடர்வண்டிக்காக இருவரும் ஒரே நடைமேடையில்.

அவன் மெல்ல தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.

டக் என்று,

அவள்

சட்டென்று,

தன் பார்வையை கீழே திருப்பிக் கொண்டாள். தரையில் கிடந்த ஏதோ ஒரு வீட்டுமனை விற்பனைக்கான விளம்பரத் தாளை அத்தனை தீவிரமாகப் பார்ப்பது போல் பாவனை செய்தாள்.

"சரி, நாம் பார்ப்பதைதை அவள் கவனிக்கவில்லை." என்று நினைத்து அவன் மீண்டும் வாட்ஸ்அப்பில் செய்தியொன்றைத் தட்டச்சு செய்யத் தொடங்கினான்.

அடுத்த பத்தாவது வினாடி.

அவன் குனிந்து போனைப் பார்க்கத் தொடங்கிய அந்த கணத்தில், அவள் மெல்ல தலையை உயர்த்தினாள். அவனது முகத்தை, அவன் தலைமுடியை, அவனது அந்தச் சிறிய புன்னகையை தீர்க்கமாகப் பார்த்தாள்.

உதட்டின் ஓரத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு. "லூசு, உன்னைத்தான் பார்க்கிறேன்!" என்பது போன்ற ஒரு மெல்லிய நாணம் கலந்த புன்னகை.

அவன் திரும்பவும் நிமிர்ந்தான்.

அவள் மீண்டும் தரையைப் பார்த்தாள். இப்போது அந்த விளம்பரத் தாள் காற்றில் எங்கோ பறந்து போயிருந்தது. தரையில் அங்காங்கே மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களைத் தீவிரமாக ரசித்துப் பார்ப்பது போல ஒரு பார்வைக்கு மாறியிருந்தாள்.

அவன் குனிந்தான்.

அவள் அவனைப் பார்த்தாள்.

இரண்டு பேருக்குமே தெரியும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று. ஆனால், நேருக்கு நேர் கண்கள் சந்தித்துக் கொள்ளும்போது மட்டும் அந்தக் காதலின் நோக்கு வர்மம் தாக்குதலுக்கு உள்ளாகி தவிடுபொடியாகி விடுகிறது!

இது ஒரு காலத்தால் அழியாத தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் காதலின் செவ்வியல் விளையாட்டு. இச்செவ்வியல் விளையாட்டின் விதிகள் இன்று வரை மாறவில்லை என்பதுதான் இதன் பின்னுள்ள ரகசியம் மற்றும் அதிசயம்.

ஆம்!

"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்."                     (குறள், 1094)

திருவள்ளுவர் காலம் முதல் இந்த 2000 வருடங்களில் ஐபோன் வந்தது, ஆன்ட்ராய்டு போன் வந்தது, 5ஜி வந்தது, ஏஐ வந்தது. ஆனால், பெண்களின் இந்தச் செவ்வியல் அகத்துறை விளையாட்டு மட்டும் மாறவே இல்லை!

தொடர்வண்டி வந்தது. அவள் ஏறினாள். அவனும் பின்னாலேயே ஏறினான். கூட்ட நெரிசலில் அவள் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு நிற்க, அவன் இரண்டு அடி தள்ளி நின்றான்.

அவன் தன் ஐபோனை கால்சராயின் பையில் போட்டான். இம்முறை அவன் அவளைப் பார்க்கவில்லை. ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தான்.

அவள் இவனையே பார்த்துக்கொண்டு, அதே குறும்புச் சிரிப்போடு மெல்ல சிரித்துக் கொண்டிருந்தாள்.

"அப்படியே நீ என்னைப் பார்த்துக் கொண்டிரு. நீ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் மனக்கண்ணில் பார்த்துக் கொள்கிறேன். நீ பார்ப்பதை நான் நிஜக் கண்ணால் பார்த்தால்தான், பிறந்ததிலிருந்து இதுவரை நிலத்தையே பார்க்காது போல நிலத்தை நோக்கி உன் பார்வையைத் திருப்பிக் கொள்வாயே!" என்று நினைத்தபடியே அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

22 Aug 2026

தலைகுனிதலின் தாவரவியல் தத்துவம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 13

தலைகுனிதலின் தாவரவியல் தத்துவம்!

மழைக்கால மாலை நேரம்.

திருவாரூர், தியாகராஜர் கல்லூரி நூலகத்தின் அமைதியான சூழல்.

வெளியே மழைத்துளிகளின் ஓசை. உள்ளே பழைய புத்தகங்களின் மணமும், மின்விசிறி சுழலும் மெல்லிய இரைச்சலும் மட்டுமே.

மூலை மேஜையில் அவன் அமர்ந்திருந்தான். கையில் தருமபுர ஆதினத்தின் ஞானசம்பந்தம் பதிப்பகம் வெளியிட்ட தண்டபாணி தேசிகர் எழுதிய திருக்குறள் உரைவளம். ஆனால் மனதுக்குள் வேறொரு காதல் புத்தகம் ஓடிக் கொண்டிருந்தது. கடந்த மூன்று மாதங்களாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பேசிப் பழகியதில்லை. ஒரே கல்லூரி, ஆனால் வேறு வேறு துறை.

கடிகாரத்தைப் பார்த்தான்.

3:15.

வழக்கமான நேரம்.

நூலகத்தின் மரக்கதவு மெதுவாகத் திறக்கும் சத்தம் கேட்டது.

வந்தாயிற்று.

அதே வெளிர் மஞ்சள் நிற சுடிதார். கையில் சில குறிப்பேடுகள், புத்தகங்கள். நூலகத்திற்குள் நுழைந்தவள், இயல்பாகச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவள் கண்கள் அவனைக் கண்டுகொண்டன.

நேரம் அப்படியே உறைந்து போன ஒரு நொடி அது.

அவள் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். "எனக்குத் தெரியும் நீ இங்கேதான் இருப்பாய் என்று", "ஏன் நேற்று வரவில்லை?", "இன்றைக்கு ஆய்வகத்தில் செம சோதனை தெரியுமா?" - வார்த்தைகளே இல்லாமல் செய்திகள் வாட்ஸ்அப் மெசேஜை விட வேகமா அவனுக்குப் பரிமாற்றம் ஆயின.

அடுத்த நொடி.

சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டாள் அவள். கண்கள் கீழே இறங்கின. கையில் இருந்த புத்தகங்களை இறுகப் பிடித்துக்கொண்டு, தலையைக் கொஞ்சம் சாய்த்து, தரையைப் பார்ப்பது போல் குனிந்தாள். உதட்டின் ஓரத்தில் ஒரு குறும்புப் புன்னகை. ஒரு மெல்லிய வெட்கம்.

அவ்வளவுதான்.

திருவள்ளுவர் இதை அப்படியே 2000 வருடத்துக்கு முன்பே ஒரு தாவரவியல் கோட்பாடு போலவே எழுதி வைத்துள்ளார்.

"நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்."               (குறள், 1093)

விளக்கம் ரொம்ப எளிமையானது. காய்ந்து போன ஒரு செடியைக் காப்பாற்ற வேரில் தண்ணீர் ஊற்றினால் போதும். பிழைத்துக் கொள்ளும். ஆனால், காதல் என்ற விசித்திரமான பயிர் இருக்கிறதே, அதற்கு மண்ணும் தேவையில்லை, மழையும் தேவையில்லை.

காதலிக்கும் அந்தப் பெண் பார்க்க வேண்டும். காதலன் பார்ப்பதை உணர்ந்து சட்டென்று தலையைக் குனிய வேண்டும். வெட்கப்பட்டுத் தலைகுனிகிற ஒரே ஒரு பார்வைதான், காய்ந்து போய்க் கிடக்கும் ஆணின் மனம் என்கிற பயிருக்கு ஊற்றப்படும் அமுதச் சொட்டு.

அவள் தலையைக் குனிந்த அந்த ஒரு நொடியில், அவனின் மனதுக்குள் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. கடந்த ஒரு வாரமாக செமஸ்டர் தேர்வுக்குத்  தயாரிப்பில் இருந்த சோர்வு, நூலகர் எச்சரித்த பயம், அசைன்மென்ட் எரிச்சல் என எல்லாமே சூரியனைக் கண்ட பனித்துளி போல மறைந்துவிட்டன.

அவள் ஒரு மேஜை அருகே சென்று உட்கார்ந்தாள். ஒரு குறிப்பேட்டைப் பிரித்து வைப்பது போல நடித்தாள். ஆனா அவள் விரல்கள் நடுங்குவது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அவன் மெதுவாக எழுந்தான். தண்டபாணி தேசிகரின் உரைவளத்தை மூடி மேஜை மேல் வைத்தான்.

அவள் மேஜையை நோக்கி நடந்தான். ஒவ்வொரு அடியும் ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்தது. காய்ந்துபோன செடிக்குத் தண்ணீர் கிடைத்துவிட்டது. இனி அது வளர வேண்டியது மட்டும்தான் பாக்கி.

அவள் மேஜைக்கு அருகே போய் நின்றான்.

அவள் நிமிர்ந்து பார்த்தாள். இம்முறை பார்வையில் வெட்கம் இல்லை, ஒரு சின்ன எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.

"இங்க உட்காரலாமா?" என்றான் அவன், குரலைத் தாழ்த்தி.

அவள் தன் புன்னகையை மறைக்க முயன்றபடி, மெல்லிய குரலில் "ம்ம் உட்காருங்க" என்றாள்.

தண்ணீர் ஊற்றப்பட்டுவிட்டது. காதல் வளர ஆரம்பித்துவிட்டது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

21 Aug 2026

உலக மகா திருட்டு!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 12

உலக மகா திருட்டு!

திருவாரூர் பேருந்து நிலையம் எதிரே.

தைலம்மை திரையரங்கம்.

திரையரங்க குளிர்சாதன வசதியில் குளிர் உடலை நடுக்க, பெரிய திரையில் சண்டைக் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.

அவன் தன் பார்வையைத் திரை மீது வைத்திருந்தாலும், கவனம் முழுக்கப் பக்கத்து இருக்கையில்தான் இருந்தது. அவனுக்கு அருகே பாப்கார்ன் பக்கெட்டைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள் அவள், அதில் சிலவற்றை எடுத்து வாயில் போட்டபடி திரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கவனம் முழுவதும் திரையிலேயே படிந்திருந்தது.

அவள் சட்டென்று தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் அவனுடைய கண்களை ஒரு மில்லி செகண்ட் தொட்டு மீண்டன. அவ்வளவுதான்.

அந்த ஒரு நொடி.

அது வெறும் பார்வையில்லை. பைட்ஸில் சொல்ல முடியாத டேட்டா டிரான்ஸ்பர்.

அவன் அருகில்தான் இருக்கிறான். நேருக்கு நேர் பார்ப்பதில் ஒன்றும் தடையும் இல்லை, பிரச்சனையும் இல்லை. ஆனாலும் அவ்வபோது நிகழ்கிறது அந்தத் திருட்டுப் பார்வைப் பார்க்கும் களவாணி வேலை.

"என்ன? அந்தப் பிராஜெக்ட் முடிஞ்சதா?" இப்போது அவனைப் பார்க்காமலே, அவள் மெல்லிய குரலில் கேட்டாள். சுற்றிலும் தியேட்டர் சத்தம் இரைந்தாலும், அவள் குரலில் அத்தனை இயல்பு.

"முக்கால்வாசி ஓவர். நைட் எப்படியும் முடிஞ்சிடும்." என்றான் அவன், தன் விரல்களை இருக்கையின் கைத்தாங்கியில் தட்டியபடி.

அவள் லேசாகச் சிரித்தாள். அந்த இருட்டிலும் அவளது புன்னகையின் ஓரத்தில் ஒரு சின்ன சுருக்கம் வெளிச்சமாய் தெரிந்தது. "குட். சீக்கிரம் முடி. நாளைக்கு வீக்கெண்ட்."

அவள் பேச்சை முடித்துவிட்டு மீண்டும் திரை வெளிச்சத்தில் மூழ்கினாள்.

அவன் இடைவேளைக்கான லைட் எரியவும் ஸ்நாக்ஸ் கௌன்ட்டருக்கு எழுந்து சென்றான்.

அவனுக்குள் ஏதோ ஒன்று ஜிவ் என்று இருந்தது. மனம் ஒரு கவிஞனைப் போல நினைக்க ஆரம்பித்தது.

"காதல் என்பது வெறும் மணி நேரப் பேச்சுகளிலோ, வார இறுதி சினிமாக்களிலோ, வாட்ஸ்அப் மெசேஜ்களின் நீளத்திலோ மட்டும் இல்லை.

அவள் அவனைத் தியேட்டர் இருட்டில் கடக்கும் போது சட்டென்று பார்க்கும் அந்த ஒரு வினாடித் திருட்டுப் பார்வை. அதில் இருக்கும் அடர்த்தி இருக்கிறதே, அது முழுமையான காதலை விடவும் மிகப் பெரியது.

வள்ளுவர் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே.

"கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது."         (குறள், 1092)

என்று சும்மாவா எழுதினார்?

அவன் பார்வையில் பாதி, அவளது பார்வையில் பாதி எனப் பிரித்துக் கணக்குப் போட முடியாது. அந்தச் சின்னஞ்சிறு திருட்டுப் பார்வை தரும் கிக். அது அரைப்பங்கு இல்லை, முழு உலகத்தை விடவும் பெரிது.

முழுக்க முழுக்க நேராகப் பார்த்து காதலைச் சொல்வதை விட, அந்தத் திருட்டுப் பார்வை தருவது அரைப் பங்கு இன்பமல்ல. அதையும் தாண்டிய பெருங்கடல்!"

இப்படி நினைத்தபடியே அவன் இரண்டு கூல்ட்ரிங்க்ஸ்களுடன் திரும்பினான்.

"தேங்க்ஸ்," அவள் அதை வாங்கினாள். ஆனால், அவள் அவனைப் பார்க்கவில்லை. திரையில் இடைவேளைக்குப் பிறகான காட்சி தொடங்க, அதைப் பார்த்தபடியே சிரித்தாள்.

ஆனால், அவனுக்குத் தெரியும். அடுத்த சில நிமிடங்களில், அந்த இருட்டிலும் அவள் மீண்டும் ஒருமுறை திருட்டுத்தனமாகப் பார்ப்பாள். அந்த ஒரே ஒரு சிறு நோக்கம் அவனின் மொத்தக் காதலையும் கொள்ளையடித்துச் செல்லும். இப்படி எப்போதும் திருடிச் செல்பவள் அவள்; ஆனானல், கைதாவதோ இவன்

ஆனாலும், அந்த ஒரு மில்லிசெகண்ட் திருட்டுப் பார்வைக்காகவே அவன் அந்த மெண்டல் டார்ச்சர் தரும் ஐநூறு ப்ராஜெக்டுகள் கூட செய்யத்  தயார்.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****