28 Nov 2025

பத்து வயதில் மாரடைப்பு!

பத்து வயதில் மாரடைப்பு!

சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஐம்பது வயதைக் கடந்தவர்களைக் கேட்டால் சர்க்கரை (சுகர்) இருக்கிறது என்றார்கள். அது அடுத்த சில ஐந்தாண்டுகளுக்குள் நாற்பதை எட்டி விட்டது. நாற்பதைக் கடந்தவர்கள் எல்லாம் சர்க்கரை இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். காலம் கடக்க முப்பதைக் கடந்தவர்கள் அப்படிச் சொல்ல ஆரம்பித்து இப்போது பத்து வயது கூட ஆகாத குழந்தைகள் சர்க்கரை இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

சர்க்கரை மட்டுமா என்றால், குழந்தைகளுக்கும் மாரடைப்பு என்று அதிர்ச்சியடைய வைக்கிறார்கள்.

மணமேடையில் உட்கார்ந்திருந்த 24 வயது ஆன மாரிமுத்து அண்ணன் மாரை வலிப்பதாகச் சொல்லி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து, அப்படியே போய் சேர்ந்ததை மணப்பெண்ணைப் போலக் கல்யாணத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் பித்துப் பிடித்தாற்போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். யாராலும் உயிரைப் பிடித்து நிறுத்த முடியவில்லை. போய்க் கொண்டிருந்த உயிர் போய்க் கொண்டே இருந்தது.

யாருக்கும் வரும், யாருக்கு வராது? என்றெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு மாரடைப்பு மனிதர்களைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறது.

சர்க்கரை, மாரடைப்பு என்று பட்டியல் இத்தோடு நிற்கிறதா என்றால், கொழுப்பு, உடல்பருமன், இரத்தக் கொதிப்பு என்று பலசரக்குக் கடை ரோக்காவைப் போல அது நீண்டு கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாகப் பல்லுக்கும் பாதகம். இவர்களைக் குறி வைத்தே நகரங்களில் சர்க்கரை நோய் மருத்துவமனைகளுக்கு நிகராகப் பல் மருத்துவமனைகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

ஏன் இப்படி ஆனது?

அப்போதெல்லாம் எப்போதாவதுதான் கேக் சாப்பிடுவோம், எப்போதாவதுதான் ஐஸ்கிரீம் சாப்பிடுவோம், சாக்லேட், குளிர்பானங்கள், ரொட்டிகள் கூட எங்கேயாவது விழாக்களுக்குச் சென்றால், வெளியூர்களுக்குச் சென்றால்தான்.

இன்று உணவே கேக்கும், ஐஸ்கிரீமும், சாக்லேட்டும், குளிர்பானங்களாகவும் ஆகி விட்டன. உணவு அப்படி ஆகக் கூடாதா என்ன?

ஆகக் கூடாதுதான். கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், குளிர்பானங்கள், ரொட்டி அனைத்தும் மூன்றில் இரண்டு பாகம் சர்க்கரையாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் சில பொருட்கள் இரு மடங்கு சர்க்கரையாலும் ஆக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றின் அதிநவீன வடிவமாக பாக்கெட் உணவுகளும் வந்து விட்டன. இவை அனைத்தும் சர்க்கரை, சுவையூட்டிகள், பதப்படுத்திகள் இல்லாமல் செய்யப்படுவது இல்லை. இவை அத்தனையுமே உடலுக்குக் கேடு. நச்சென்று சொல்ல வேண்டுமானால் சிகரெட்டிலும், மதுவிலும் உடல் நலத்திற்குக் கேடு என்று வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது, இவற்றில் இல்லை.

நிலைமை இப்படியானால் இனிப்பே சாப்பிடக் கூடாதா என்ன?

ஏன் சாப்பிடக் கூடாது?

இனிப்புக்குத்தானே பழங்கள் இருக்கின்றன. அவற்றைப் பழங்களாகவே சாப்பிடலாம். பழச்சாறாகச் சாப்பிட வேண்டியதில்லை. பழச்சாறு என்றால் அங்கே ஏற்கனவே இனிப்பாக உள்ள பழத்துடன் சர்க்கரை வந்து சேர்ந்து கொள்ளும். பழமே இனிப்பு எனும் போதுஅதைப் பழச்சாறாக்கி இன்னும் சர்க்கரையைக் கொட்டுவது எந்த விதத்தில் நியாயமாகும்?

பழத்தின் இனிப்பு மட்டும் போதாதா?

கடலை உருண்டை, எள்ளுருண்டை இருக்கின்றன.

இதற்கு இதுதான் தீர்வா?

இது உணவு அடக்குமுறை போல அல்லவா இருக்கிறது!

பாரம்பரியமாகத் தலைமுறை வாழ வேண்டுமென்றால், இப்போதுள்ள தலைமுறை பாரம்பரியமான உணவு முறைகளுக்கு மாறுவதைத் தவிர வேறு வழிகள் இருக்கின்றனவா என்ன?

*****

27 Nov 2025

நான் அவனில்லை மோட் - புலம்ப வைக்கும் ஏஐ அக்கிரமங்கள்!

நான் அவனில்லை – ஏஐ அட்டகாசங்கள்!

நீங்கள் அப்படிப் பேசி இருக்க மாட்டீர்கள். நீங்கள் அப்படியென்ன ஆபாச வார்த்தைகளைப் பேசுபவரா என்ன?

நீங்கள் அப்படிக் கருத்து சொல்லியிருக்கவும் மாட்டீர்கள். அது சரி, நீங்கள் அப்படியென்ன மட்டரகமான கருத்தைச் சொல்பவரா என்ன?

நீங்கள் அப்படி மோசமாக எதையும் செய்து காட்டுபவரில்லை. நீங்கள் அப்படிச் செய்து காட்ட எப்படி ஒப்புக் கொள்வீர்கள்?

நீங்கள் அவ்வளவு அநாகரிமாக உடை அணியக் கூடியவரே இல்லை. உடை அணிவதில் ஆபாசம் அறியாதவரா நீங்கள்?

நீங்கள் நாட்டுக்கு எதிராக அப்படி எந்தப் பரப்புரையும் செய்திருக்க மாட்டீர்க்ள. இந்த நாட்டின் மீது எவ்வளவு மதிப்புடையவர் நீங்கள்.

ஆனால் இந்த அத்தனையையும் நீங்கள் செய்திருப்பீர்கள் என்றால்… உங்களுக்கு எப்படி இருக்கிறது?

அது எப்படிப் பேசாதைப் பேசியிருக்க முடியும், செய்யாததைச் செய்திருக்க முடியும்?

இங்குதான் செயற்கை நுண்ணறிவு டீப் பேக் என்ற பெயரில் பயன்படுத்துகிறது. டீப் பேக் என்பது டீப் லேர்னிங் + பேக் என்பதன் கலவை.

இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. நீங்கள் வீட்டில் படுத்துத் தூங்கியபடி குறட்டை விட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால், நீங்கள் பேசுவது போல இணையவெளியில் நேரலை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். ஓ அப்படியா! நான் தூக்கத்தில் காணும் கனவில் பேசுவதை ஒளிபரப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டதா என்று அப்பாவித்தனமாகக் கேட்டால், செயற்கை நுண்ணறிவின் கோர முகம் உங்களுக்குத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இங்கு என்ன நடக்கிறது என்றால், நீங்கள் பேசுவது போல இன்னொருவர் பேசிக் கொண்டிருப்பார். அவர் பேச பேச உங்கள் முகத்தை அவர் முகத்தில் நொடிக்கு நொடி நகலெடுத்து அவர் முகத்தில் ஒட்டி நீங்கள் பேசுவது போல நேரலையை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு. இது ஒரு வகை.

இன்னொரு வகை, நீங்கள் பேசுவது போலக் காணொளியை உருவாக்கிப் பரப்பி விடுவது. அதற்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் பல வந்து விட்டன. நீங்களே கூட திருவள்ளுவர் பேசுவது போலக் காணொளியை உருவாக்கி வெளியிடலாம். அப்படித்தான் பிரபல தலைவர்கள் பேசுவது போலவும், அமைச்சர்கள் பேசுவது போலவும், தொழிலதிபர்கள் பேசுவது போலவும் காணொளிகளை உருவாக்கிப் பரப்புகிறார்கள். இப்படிப் பிரபலங்கள் பொய் பேசுவது போல, ஆபாச வார்த்தைகளைப் பேசுவது போல என எப்படி வேண்டுமானாலும் காணொளிகளை உருவாக்கலாம், பரப்பலாம் என்று இன்று நிலைமை இருக்கிறது.

நீங்கள் ஓர் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்கிறீர்கள். உங்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போல உங்கள் உயர் அதிகாரியோ, அவருக்குக் கீழ் இருக்கும் சகாக்களோ இல்லாமல் இருக்கலாம். உங்கள் உயர் அதிகாரியின் ஒரு புகைப்படம் இருந்தால் போதும் அதை வைத்து அவர் உரையாடுவது போலவும் அவரது சகாக்கள் புடை சூழ உங்களுடன் இணையவெளியில் உரையாடுவது போலவும் ஏற்பாடு செய்து விடலாம்.

நீங்கள் இணையவழியில் உங்கள் நண்பருடன், உங்கள் துணைவருடன், உங்கள் உறவினருடன் பேசிக் கொண்டிருப்பதாக நினைக்கலாம். எதிர்முனையில் பேசுவது அப்படி உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு பிம்பமாக இல்லை என்பதை உங்களால் உறுதி செய்து கொள்ள முடிவது தற்போது கடினமாகிக் கொண்டிருக்கிறது.

இப்படித் திடீரென புலனவழி அழைப்பில் (வாட்ஸ்ஆப் கால்) உங்கள் உயிர் நண்பர் தோன்றி அவசர அவசரமாக லட்ச ரூபாய் தேவைப்படுவதாகவும், மறுநாள் கொடுத்து விடுவதாகவும் சொன்னால் என்ன செய்வீர்கள்? அழைத்தது உண்மையில் உங்கள் உயிர் நண்பர் என்றால் உங்களுக்கு உதவிய திருப்தியும், நண்பருக்கும் தக்க நேரத்தில் பலனடைந்த திருப்தியும் இருக்கும். ஆனால் அழைத்தது செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய பித்தலாட்ட பிம்பம் என்றால் உங்கள் பணமும் போய் விடும், மன நிம்மதியும் போய் விடும்.

செயற்கை நுண்ணறிவு உலகம் போகிற போக்குப் பயங்கரமாகத்தான் இருக்கிறது. எது எவ்வளவு பயரங்கரமாக இருந்தாலும் அதற்குத் தீனி கிடைத்தால்தான் உலவ முடியும் என்பது இயற்கையில் மட்டுமல்ல செயற்கையிலும் அதுதான் நியதி. செயற்கை நுண்ணறிவுக்குத் தீனி என்பது நாமே வலிந்து கொடுக்கும் தரவுகள்தான். புரியும்படி சொன்னால் புலனம் (வாட்ஸ்ஆப்), முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்றவற்றில் உணர்ச்சி மேலீட்டிலும், அதிக விருப்பங்களுக்கு ஏங்கியும் உங்களை அறியாமல் நீங்களே கொடுத்துக் கொண்டிருக்கும் தகவல்கள்தான் செயற்கை நுண்ணறிவின் கோர மிருகத்துக்குக் கிடைக்கும் தீனிகள். தீனிகளைத் தின்று கொழுக்கும் கோர மிருகம் சும்மா இருக்குமா? அது தன் கோர முகத்தைக் காட்டுகிறது.

இப்போதெல்லாம் ஒருவரின் ரகசியத்தை அறிய துப்பறிவாளர்கள் (டிடெடிக்டிவ்) கொண்டுதான் அறிய வேண்டும் என்றில்லாத அளவுக்குப் பலரின் புலன தன்னிலைமைகள் (வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்) இருக்கின்றன என்பது ஆராய்ந்து தெளியும் அளவுக்கு கடினமான மெய்மை கிடையாது.

உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியும் புகைப்படப் பதிவும், உங்களைப் பற்றிய சிறு சிறு விவரங்களும் செயற்கை நுண்ணறிவு களம் இறங்கி விட்ட இணைய உலகுக்குக் கிடைக்கும் மாயப்பொறிகள் மற்றும் மாரீச வலைகள்.

இன்று இணைய உலகில் நம்பி எதையும் செய்ய முடியாது என்ற நிலை நிஜ உலகை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை இந்த உலகில் நிஜ மனிதர்கள் யார், ரோபோட்டிக் மனிதர்கள் யார் என்று தெரியாத உலகில் நடக்கப் போகிறீர்கள். அந்த அளவுக்கு உலகம் மோசடிகளாலும் ஏமாற்றுகளாலும் நிறைய தயாராகிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் சரியாக உங்களை வைத்துக் கொள்ளவில்லை என்றால், உங்களைத் தவறாகக் கொண்டு செல்ல இங்கு எல்லாம் தயாராகி விட்டன. இனி நீங்கள் சரியாக இருந்தால் மட்டுமே உங்களிடம் எல்லாம் சரியாக இருக்கும். கொஞ்சம் பிசகினாலும் அசகு பிசகு கடைசியில் அஸ்க்கு பிஸ்க்கு ஆகலாம்.

*****

26 Nov 2025

ஆப்படிக்கும் ஆப்புகள்!

ஆப்படிக்கும் ஆப்புகள்!

செயலிகள் எனும் ஆப்கள் (App) சூழ் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆப்கள் சூழ் உலகில் சிலபல நேரங்களில் ஆப்புகளை அசைத்து விட்ட குரங்குகளைப் போல அகப்பட்டுக் கிடந்துழவும் வேண்டியிருக்கிறது.

எளிமையாகப் பணம் செலுத்த உதவும் ஆப்களில் கடன் வாங்கி சிக்கிக் கொண்டால் அதோ கதியாகி விடுகிறது.

பொழுதுபோக்கிற்காக விளையாடும் ஆப்களில் சூதாட்டம் ஆடினால் கதை கந்தலாகி விடுகிறது.

ஒவ்வொரு நாளும் ஆப்கள் அடுத்த கட்ட விஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் எண்ம தங்கம் எனப்படும் டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கான ஆப்கள்.

தங்கத்தை ஒரு கிராம் வாங்குவதென்றால் பத்தாயிரத்திற்கு மேல் ஆகும் நிலையில் பத்து ரூபாய்க்குக் கூட வாங்க வசதி செய்திருப்பது இந்த டிஜிட்டல் தங்க ஆப்களின் சிறப்பம்சம். அந்தச் சிறப்பம்சமே பேரச்சமாக மாறியிருப்பதுதான் இந்த ஆப்களின் பின்னணியில் இருக்கும் கோர அம்சம்.

ஒரு கிராம் தங்கம் பத்தாயிரத்திற்கு மேல் என்றாலும் அதை வாங்கி விட்டால் உங்களுக்கே உங்களுத்தான். அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம், செய்கூலி, சேதாரம் போனாலும் தங்கத்தின் தூய்மைக்கேற்ப எட்டாயிரமோ ஒன்பதாயிரமோ கைக்கு வந்து விடும். ஏன் விற்க வேண்டும் என்று நினைத்தால் அதை அடகு வைக்கலாம். அதை ஏன் அடகு வைக்க வேண்டும் என்று நினைத்தால், அப்படியே பூட்டி வைத்து தேவைப்படும் போது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். வாங்கிய பணத்துக்கான சொத்து உங்கள் கைக்கு வந்து விடுகிறது.

இதையே ஏன் எண்ம தங்க செயலிகளில வாங்கக் கூடாது?

டிஜிட்டல் தங்க ஆப்களில் தங்கத்தை வாங்குவது சுலபமாக இருக்கிறது. விற்பது பல நேரங்களில் கடினமாக இருக்கிறது.

டிஜிட்டல் தங்க ஆப்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

நீங்கள் வாங்கும் தொகைக்கேற்ப தங்கத்தை வாங்கி வைப்போம் என்கிறார்கள். அதை எங்கே வாங்கி வைப்பார்கள்? எப்படி வாங்கி வைப்பார்கள்? அவர்கள் வாங்கி வைக்கும் தங்கத்தின் தூய்மை எந்த அளவுக்கு இருக்கும்? அவற்றையெல்லாம் நாம் பார்வையிட முடியுமா? அல்லது சோதிக்கத்தான் முடியுமா?

நம் கண் பார்வையில் கடை விரித்துக் காணாமல் போகும் எத்தனையோ நிதி நிறுவன மோசடிகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த டிஜிட்டல் தங்க ஆப்களை நாம் அலைபேசிகளில்தான் பார்க்கிறோம். நேரில் பார்ப்பதில்லை. கண்ணால் கண்டதே காணாமல் போகும் போது, கண்ணால் காணாமல் இருக்கும் இவற்றின் நிலை என்னவாகும்?

நாட்டில் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் நல்ல நிறுவனங்களே பல நேரங்களில் நட்டமடைகின்றன, திவாலாகின்றன. அப்படி இந்த டிஜிட்டல் தங்கத்தை வாங்கி வைக்கும் நிறுவனங்கள் நட்டமோ, திவாலோ அடைந்தால் ஆப்களின் மூலம் வாங்கி வைத்த உங்களுடைய தங்கம் என்னவாகும்?

வங்கியில் நீங்கள் பாதுகாப்பென நம்பி வைத்திருக்கும் நிரந்தர வைப்புத் திட்டத்திற்கே (பிக்சட் டெபாசிட்) வங்கிகள் காப்பீடு செய்து வைத்திருக்கின்றன என்கிற போது இந்த டிஜிட்டல் தங்க ஆப் நிறுவனங்கள் அப்படி வாங்கி வைத்திருக்கும் தங்கத்திற்காக எதாவது காப்பீடு செய்து வைத்திருக்கின்றனவா? அதை நீங்கள் எப்படி அறிந்து கொள்வீர்கள்?

தங்கத்தின் எதார்த்த நிலை என்ன தெரியுமா?

தங்கம் எந்தக் காலத்திலும் விலை மதிக்க முடியாத பொருள். அதனால் பலரும் ஆசை ஆசையாய் வாங்கி வைத்த தங்கத்தை வங்கிப் பெட்டகத்தில் (லாக்கர்) வைத்திருக்கிறார்கள். இந்த டிஜிட்டல் தங்க ஆப் நிறுவனங்கள் அப்படி வாங்கிய தங்கத்தை எங்கே பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்? ஒருவேளை அந்தத் தங்கத்திற்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வார்கள்?

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான இன்னொரு கேள்வி இருக்கிறது.

இந்த டிஜிட்டல் தங்க ஆப் நிறுவனங்கள் ஏமாற்றி விட்டால் யாரிடம் முறை செய்வது?

 இவற்றைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கு அமைப்புகள் இருக்கின்றனவா நம் நாட்டில்? துரதிர்ஷ்டவசமாக அப்படி எந்த அமைப்புகளும் இல்லை என்று அண்மையில் பங்குச் சந்தை ஒழுங்காற்று நிறுவனமே (செபி) கைவிரித்து விட்ட நிலையில் எந்த நம்பிக்கையில் டிஜிட்டல் தங்க ஆப்கள் மூலம் தங்கத்தை வாங்குவீர்கள்?

அது இருக்கட்டும். இப்போது, நாம் எப்படித்தான் தங்கம் வாங்குவது?

தங்கத்தைத் தங்கமாகவே வாங்குவது சிறந்த முறை.

அதில் செய்கூலி, சேதாரப் பிரச்சனைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நகையாக வாங்காமல் தங்க நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

பாதுகாப்பு காரணங்களுக்காக எண்ம முறையில் (டிஜிட்டல்) வாங்க வேண்டும் என்றால், இந்திய மத்திய வங்கியின் (ரிசர்வ் வங்கி) தங்கப் பத்திரங்கள் இருக்கின்றன. பங்குச் சந்தையில் (இடிஎப்பில்) வர்த்தகமாகும் கோல்ட்பீஸ்கள் உள்ளன. இவற்றைப் பரிசீலிப்பது தங்கத்தை வாங்குவதில் பாதுகாப்பான முறைகளாக இருக்கும்.

தங்கத்தை வாங்கும் போது நாம் அதிகமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. காரணம், எது விலைமதிப்புமிக்கமாக இருக்கிறதோ அவற்றிலும் மோசடிகளும் அதிகமாக இருக்கின்றன.

*****

24 Nov 2025

செயற்கை நுண்ணறிவு வெடிக்குமா, வெடிக்காதா?

செயற்கை நுண்ணறிவு நீர்க்குமிழி ஆகுமா?

நீர்க்குமிழி (பப்புள்) என்ற சொல் பயன்பாடு முதலீட்டு உலகில் ஒலிக்கும் அபாயகரமான ஒன்று.

நீர்க்குமிழி நிலையானதன்று. சிறியதாகத் துவங்கிப் பெரியதாகி எந்நேரத்தில் வேண்டுமானாலும் வெடிக்கக் கூடியது. முதலீட்டு உலகில் வெடிக்கும் நீர்க்குமிழிகளும் அப்படிப்பட்டவையே.

நீர்க்குமிழி என்றால் என்ன என்கிறீர்களா?

தாங்கள் நம்பும் முதலீட்டுப் பொருள் மிகப் பிரமாண்டமாக வளரும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் அம்முதலீட்டுப் பொருளின் மீது ஒன்று நூறாகும், நூறு ஆயிரமாகும், ஆயிரம் லட்சமாகும், லட்சம் கோடியாகும் என்ற நம்பிக்கையில் சக்திக்கு மீறிய முதலீட்டைத் தொடர்வார்கள். ஒரு கட்டத்தில் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வளர்ச்சியைத் தராத அம்முதலீட்டுப் பொருள் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கும். அப்போது எவ்வளவு பேராசையோடு முதலீட்டைத் தொடர்ந்தார்களோ, அதே அளவு பேரச்சத்தோடு முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். பேராசையில் உச்சம் தொட்ட முதலீடு இப்போது பேரச்சத்தால் அதள பாதாளத்தை நோக்கிப் பயணிக்கும். பல மடங்கு விலையேறிய முதலீட்டுப் பொருள் இப்போது பல மடங்கு விலை வீழ்ச்சியைச் சந்திக்கும். கோடி இப்போது லட்சமாகும், லட்சம் அடுத்து ஆயிரமாகும், ஆயிரம் அடுத்து நூறாகும்,  நூறு அடுத்து ஒன்றாகும், ஒன்று பூஜ்ஜியத்தை நோக்கியும் செல்லும். இதையே நீர்க்குமிழி வெடிப்பு என்பார்கள்.

முதலீட்டு உலகம் சில, பல நீர்க்குமிழிகளை அவ்வபோது அனுபவித்துப் அறிந்துள்ளது. துலிப் மேனியா நீர்க்குமிழி (துலிப் மேனியா பப்புள்), இணைய தகவலியல் நீர்க்குமிழி (டாட் காம் பப்புள்), அமெரிக்க வங்கி நீர்க்குமிழி (பேங்கிங் பப்புள்) போன்றவை உலகறிந்த நீர்க்குமிழிகள். அந்த வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவில் செய்யப்படும் முதலீடுகளும் நீர்க்குமிழி விளைவைச் சந்திக்குமா என்கிற எச்சரிக்கையும் அச்சமும் முதலீட்டு உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.

பொருளாதார மேதைகளில் சிலர் செயற்கை நுண்ணறிவு விரைவில் நீர்க்குமியாகும் என்கிறார்கள். ஜெரோம் பவெல் போன்ற அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர்கள் அப்படியாகாது என்கிறார்கள். அப்படி ஆகும் அல்லது அப்படி ஆகாது ஆகிய இரண்டுமே கணிப்புகள்தான். தேர்தல் கணிப்புகளைப் போன்றவைதான். கணிப்புகள் உண்மையும் ஆகலாம், உண்மை ஆகாமலும் போகலாம். கணிப்புகள் எப்படி ஆகும் என்பதை அறிந்து கொள்ள நாம் காத்திருக்கத்தான் வேண்டும். அது எப்படி ஆகும் என்பது காலத்தால் முன்னோக்கி நகரும் போதே அறியக் கூடியதாக உள்ளது. அப்படி முன்னோக்கி நகர்வதற்கான கால இயந்திரம் ஏதும் நம்மிடம் இல்லை.

என்னதான் நடந்து கொண்டிருக்கிறது இந்த செயற்கை நுண்ணறிவு முதலீடுகளில்?

செயற்கை நுண்ணறிவு நீர்க்குமிழியாகும் என்பதற்குச் சொல்லப்படும் முக்கிய காரணங்களுள் ஒன்று ஏராளமான முதலீடு அதில் கொட்டப்படுகிறது என்பதுதான். அப்படி ஆகாது என்பதற்குச் சொல்லப்படும் முதன்மையாக காரணங்களுள் ஒன்று, அப்படிக் கொட்டப்படும் முதலீடுகள் கடன்வாங்கி கொட்டப்படவில்லை என்பதுதான்.

செயற்கை நுண்ணறிவு முதலீட்டு முயற்சிகள் எப்படி உள்ளன?

இப்போது எதார்த்தம் எப்படி உள்ளது என்பதை நோக்கும் போது, செயற்கை நுண்ணறிவில் நம்பி கொட்டப்படும் லாபத்தைத் தேடும் முதலீட்டு முயற்சிகள் 95 சதவீதம் தோல்வியில் முடிகின்றன என்பதைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. புதிய முயற்சிகளுக்கு எப்போதும் இப்படித்தான் நேரும் என்பது இயற்கைதான் என்றாலும் அபரிமிதமாகக் கொட்டப்படும் முதலீடுகள் குறைந்தபட்சம் போட்ட முதலைக் கூட எடுக்க முடியாமல் போகும் போது சிறிய அளவிலேனும் நீர்க்குமிழியாகி வெடிக்கவே செய்யும்.

நிலைமை அப்படியானால் செயற்கை நுண்ணறிவில் நாம் பின்னோக்கிச் சென்று விடுவோமா என்றால் அப்படியும் ஆகாது. இணையத் தகவலியல் நீர்க்குமிழியாகி வெடித்த பிறகு இணையமோ தகவல் தொடர்பியலோ இல்லாமல் போய் விடவில்லை. அதன் பயன்பாடுகள் இப்போது அப்போதை விட அதிகமாகவே உள்ளன. வங்கியியல் நீர்க்குமிழி வெடித்த பிறகு அமெரிக்காவில் வங்கிகளே இல்லாமல் போய் விட வில்லை. அளவுக்கு மீறிய கொட்டிய முதலீடுகளே அழிந்து போயின. அளவறிந்து செய்த முதலீடுகள் அளவோடு லாபத்தைத் தரவே செய்தன.

செயற்கை நுண்ணறிவில் வருங்காலத்தில் என்னதான் நடக்கும்?

அறிந்தோ அறியாமலோ நாம் செயற்கை நுண்ணறிவு யுகத்தை நோக்கி நகர்ந்து விட்டோம். செயற்கை நுண்ணறிவு நீர்க்குமிழியானாலும் ஆகாமல் போனாலும் செயற்கை நுண்ணறிவிலிருந்து இயற்கை நுண்ணறிவைக் கொண்ட மனிதர்கள் தப்பிக்க முடியாது என்பது மட்டும் நிதர்சனம். செயற்கை நுண்ணறிவு நீர்க்குமியாகி வெடித்தாலும் இங்கே உள்ளே வரும் மற்றும் போகும் முதலீடுகளைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால் அடுத்து வியாபார உலகிற்கான கதவு செயற்கை நுண்ணறிவு என்னும் பொருளாதார சாவியுனுள்ளே பொதிந்துள்ளது. புதுப்புது வியாபார உலகிற்கான கதவுகளைத் திறக்காமல் இங்கு பொருளாதாரம் இயங்காது. அப்படியானால் நிலைமை என்னவாகும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

*****

22 Nov 2025

கடைசி வரை திருந்தாதவன்

கடைசி வரை திருந்தாதவன்

பள்ளிக்கூடத்தில் விட்டால்தான் திருந்துவான் என்றார்கள்

அவன் பள்ளிக்கூடத்தில் திருந்தவில்லை

ஜெயிலுக்குப் போனால்தான் திருந்துவான் என்றார்கள்

அவன் ஜெயிலிலும் திருந்தவில்லை

கல்யாணம் பண்ணி வைத்தால்தான் திருந்துவான் என்றார்கள்

அவன் கல்யாணம் பண்ணியும் திருந்தவில்லை

ஒரு குழந்தை பிறந்தால் திருந்துவான் என்றார்கள்

அவன் குழந்தை பிறந்தும் திருந்தவில்லை

ஐம்பது வயதானால் திருந்திடுவான் என்றார்கள்

அவன் ஐம்பது ஆகியும் திருந்தவில்லை

இவனெல்லாம் கட்டையில் போகும் போதுதான் திருந்துவான் என்றார்கள்

அவன் கட்டையில் போகும் போதும் திருந்தவில்லை

அவனைக் கொலை செய்த வழக்கில்

ஐந்து பேர் கைதாகி உள்ளே போனார்கள்

*****

19 Nov 2025

ஆலுமா டோலுமாக்காரன்

ஆலுமா டோலுமாக்காரன்

குப்பைத் தொட்டி கண்டபடி சிதறிக் கிடக்க

நான்கு நாட்களுக்கு முன்பு செத்த பெருச்சாளி நாறிக் கிடக்க

தெருநாய் அசிங்கம் செய்து வைத்த நாற்றம் பெருக்கெடுக்க

தோண்டி வைத்த சாக்கடை மணமணக்க

ஓரத்தில் பாலிதீனும் குப்பைகளும் எரிந்து புகை பரப்பிக் கொண்டிருக்க

முக்குத் திரும்புகையில் சிறுநீர் வாடை சூழ்ந்து கொள்ள

வெட்டி வைத்தக் குழிகள் பிதுக்கித் தள்ளிய மண்ணில்

சாலை முழுவதும் சேறாகிக் கிடக்க

ஏகாந்தமாய் நடந்து கொண்டிருக்கிறான்

பிச்சைக்கார பைத்தியக்காரன் ஒருவன்

ஏகத்துக்கும் சிரித்தபடி

அவ்வபோது ஆலுமா டோலுமா எனக் கூவியபடி

*****

17 Nov 2025

மழைபாடு!

மழைபாடு!

யார் சொன்னதைக் கேட்கிறார்கள்

என் பேச்சுக்கென்ன மதிப்பு இருக்கிறது

இந்த மழையே போ என்றாலும் போகாது

வா என்றாலும் வராது

*

வெளியே கிளம்பும் போது மட்டும்

மழை வந்து விடக் கூடாது

பாவம் மழையைத் திட்டித் தீர்த்து…

வீட்டுக்குள் வந்த பிறகு

எவ்வளவு வேண்டுமானாலும் பெய்யலாம்

வாழ்க மழையென வாழ்த்தி…

ஆனால் வீட்டுக்குள் வந்து விடக் கூடாது மழை

*

நல்ல மழை

இனி நல்ல புழுதி வர

நாளாகும்

*****